ஒரு நாள் காலை, நான் பள்ளி உடையில் இரயிலில் தொங்கியபடி சென்று கொண்டு இருந்தேன். ஒரு இரயில் நிலையம் தாண்டியது. தோழிகளுடன் ப்ளாட்பார்மில் நடந்து வந்துகொண்டு இருந்தாள் அவள்-' ராஜீ' '.
அவளும் நானும் எதர்ச்சையாக பார்த்துக் கொண்டோம். உடனே நான் பார்க்காதது போல காட்டிக்கொள்ள என் பார்வையை திருப்பினேன். மீண்டும் அவளை பார்க்க தலை திருப்பினேன், அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம் நான் ஏதோ கேட்க, அவளும் ஏதோ சைகை காட்டினாள்."எனக்கு ஒன்னும் புரியல, என்ன சொல்ற" என்றேன். "இறங்கி வெய்ட் பண்ணு" என்று அவள் கூறினாள். நானும் இரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்தேன், அவளுக்காக.
ரொம்ப நாளைக்கு பிறகு அவளைப் பார்த்ததில் எனக்கு சந்தோஷம் தான். அவள் என் ஐந்தாம் வகுப்பு தொழி. ஒரு சின்ன சண்டையில் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டோம். இருவரும் வேறு பள்ளி மாறியதால் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை இப்போது பன்னிரண்டாம் வகுப்பு. அவளிடம் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் சண்டையே இல்லை என்று நினைக்கும் படி, "எப்டி இருக்க அப்துல்?" என்று பின்னேயிருந்து அழைத்தாள். மிகவும் மெல்லிய குரல் அவளுக்கு. சின்னதாய் சிரித்தபடி "நல்லா இருக்கேன். நீ.?" என்றேன். அவளும் சிரித்தபடியே "நல்லா இருக்கேன்" என்றாள். "எப்டி படிச்சிருக்க?" என்று கேட்டாள். "ஏதோ படிச்சிருக்கேன்" என்றேன்.
அன்று என் பொதுத்தேர்வு என்பதையும் மறந்து, என் மனம் அவளுடனே பேசிக்கொண்டிருக்க நினைத்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாத வண்ணம், ஆண் முறுக்கை காட்ட " நான் கெளம்புறேன், எக்ஸாம்க்கு டைம் ஆகுது" என்று கூறினேன். "சரி, நாளைக்கும் இதே ட்ரைன்ல வா அப்துல், பாய்" என்று சொல்லி திரும்பி சென்றாள். அந்த வார்த்தையில் கிடைத்த சந்தோஷத்தில் சிரித்தபடியே இன்று கண்விழித்தேன்.
"ச்ச வெறும் கனவா.."
பத்து வருடங்கள் கடந்துவிட்டன, இன்றும் அவள் என் கனவில் வருகிறாள். ஆனால்
அவள் நினைவிலாவது நான் இருப்பேனா என்ற கேள்வி மனதை குழப்புகிறது.
தினமும் எட்டு மணி நேரம் சும்மா தூங்கி எழுவதற்கு பதிலாய், ஒரு கனவுடன் துங்கி எழுவது நல்ல அனுபவம் தான்.
#
நேர்ல பாக்க முடியாத பல பேர அங்க தான் பாக்க முடியுது, ஒரு தடவ செத்துப்
போன ஒசாமா-பின்-லேடன் வந்திருந்தாரு. அத இன்னோரு தடவ சொல்ரேன்..:)